Tuesday, April 16, 2013

SSLC மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் போனஸ்!



சமீபத்தில் நடந்து முடிந்த அரசு பொது தேர்வுகளின்போது பொறுப்பற்ற சில மனிதர்களின் பல்வேறு குளறு படிகளால் மாணாக்கர்கள் பாதிக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி வெளியாகி இருந்தது.  
இந்நிலையில், பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் கேட்கப்பட்டிருந்த வினாக்கள் கடினமாக இருந்தது குறித்த புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் போனஸாக வழங்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் SSLC கணிதத் தேர்வு கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெற்றது. வரைவு கட்டமைப்புக்கு (Blue Print) மாறாக வினாத்தாள் அமைந்திருந்ததால் மாணவர்கள் குழப்பமடைந்தனர். 5 மதிப்பெண்களுக்கான பகுதியில் (Matrix) வழக்கமாகக் கேட்கும் ஒரு வினாவுக்குப் பதிலாக 2 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன இயற்கணிதம் (Algebra) பகுதியில் வழக்கமாக கேட்கப்படும் 3 வினாக்களுக்குப் பதிலாக 2 வினாக்கள் மட்டுமே கேட்கப்பட்டிருந்தன. ஒரு மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்கு விடை எழுத 5 நிமிடங்கள் செலவழிக்க வேண்டியிருந்தது.

மேலும் 5 மதிப்பெண்கள் வினாக்களில் 2 வினாக்களுக்கு விடை எழுத அதிக நேரம் செலவழிக்கும் வகையில் கடினமாக இருந்தது. இதனால் கிராமப்புற மாணாக்கர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று திங்கள்கிழமை தொடங்கியுள்ள நிலையில் கணித தேர்வில் 10 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விடைக் குறிப்பாணையில் அணிகள், முக்கோணவியல் பாடப் பிரிவுகளில் வரைவு கட்டமைப்புக்கு மாறாக கூடுதல் வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதால் கீழ்க்கண்ட நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். பிரிவு 3-இல் உள்ள அனைத்து விடைகளையும் மதிப்பீடு செய்து அதில் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற இரண்டு விடைகளைத் தேர்வு செய்து அவற்றுக்கு முழுமதிப்பெண்கள் வழங்க வேண்டும்.அதாவது 0-4 மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும் 5மதிப்பெண்கள் முழுமையாக வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் கூடுதலாக 10 மதிப்பெண்கள் கிடைக்கும். எனினும், அனைத்து விடைகளையும் மதிப்பீடு செய்து என்ற வாசகம் இடம் பெற்றிருப்பதால்,அந்தப் பிரிவிலுள்ள அனைத்து (9) விடைகளையும் எழுதிய மாணவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுமா அல்லது ஓரிரு வினாக்களை எழுதியுள்ளவர்களுக்கும் வழங்கலாமா என்ற குழப்பம் ஆசிரியர்கள் மத்தியில் நிலவுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலர் சாமி சத்தியமூர்த்தி கூறும்போது: கணிதத் தேர்வுக்கான வினாத்தாளில் மறைமுகமான வகையில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதுடன், ப்ளூ பிரிண்ட் படி கேள்விகள் கேட்கப்படாததால் கிராமப்புற மாணவர்கள் திணறியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தேர்வுகள் இயக்ககம் தவறைச் சரி செய்யும் வகையில் 10 மதிப்பெண்கள் கிடைக்க வழிவகை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் கணிதத்தில் நூறு மதிப்பெண் பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், கிராமப்புற மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் கணிசமாக உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.

 நன்றி : www.inneram.com

No comments:

Post a Comment